கூட்டறிக்கை
சென்னை மாநகரில் ஒவ்வொரு நாளும் சுமார் 7600 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாகுவதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாடு உருவாக்கும் திடக்கழிவுகளில் 45 விழுக்காடு ஆகும். சென்னை மாநகரின் குப்பை மேலாண்மை கடும் போதாமைகள் நிறைந்ததாகவும் தீவிர சூழல் – சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினையாகவும் உருவெடுத்திருக்கும் சூழலில் மாநகராட்சியானது ‘ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம்’ என்ற பெயரில் தனியார் பங்களிப்புடன் கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ‘குப்பை எரிவுலைகளை’ கொடுங்கையூர் பகுதியில் நிறுவத் திட்டமிட்டிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இத்திட்டம் சென்னை மாநகரின் திருவற்றியூர் முதல் அண்ணாநகர் வரையிலான எட்டு பிரிவுகளின் எல்லா திடக்கழிவுகளையும், தென்சென்னையை உள்ளடக்கிய எஞ்சிய ஏழு பிரிவுகளின் மட்காத கழிவுகளையும் கையாளவிருப்பதாக ஒப்பந்த ஆவணம் குறிப்பிடுகிறது. இவ்வகையில் இந்தத் திட்த்தின்மூலமாக வடசென்னையில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளில் தோராயமாக 500 மெட்ரிக் டன்கள் நெகிழி உள்ளிட்ட 2100 மெட்ரிக் டன்கள் திடக்கழிவுகள் எரித்து அழிக்கப்படவிருக்கின்றன.
கழிவிலிருந்து மின்சாரம் எப்படி எடுக்கப்படுகிறது?
திடக்கழிவுகளில் கலந்திருக்கும் அதிக எரிதிறன் கொண்ட நெகிழி, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை எரிக்கும்போது ஏற்படும் வெப்பத்தை பயன்படுத்தி பாய்லரில் இருக்கும் நீரைக் கொதிக்கச் செய்து நீராவியாக்கி அந்த எரிசக்தியை மின்சாரமாக மாற்றுவதையே கழிவிலிருந்து மின்சாரம் என்கிறார்கள். கழிவுகளை எரித்தலை பொதுமைப்படுத்தி சாம்பலாக்குதல் (incineration) என்று சொன்னாலும் அவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் பொறுத்து பைராலிசிஸ், கேசிபிகேஷன் என்ற பல பெயர்களில் இவை வழங்கப்படுகின்றன. பைராலிசிஸ் எனப்படுவது நன்கு வகைபிரிக்கப்பட்ட நெகிழிக் குப்பையை எரித்து எண்ணெயாக மாற்றுவதாகும்.
‘கழிவிலிருந்து மின்சாரம்’ திட்டம் ஏன் அபாயகரமானது?
கழிவிலிருந்து மின்சாரம் என்ற சொல்லாடல் கேட்பதற்கு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் இது மிக மோசமான பின்வரும் சூழல் மற்றும் சமூகத் தாக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
- காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் குப்பை எரிவுலைகள்
குப்பை எரிவுலைகள் – அவை உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும்கூட டயாக்சின்கள், பியூரான்கள் உள்ளிட்ட மிகமோசமான பல்வேறு நச்சு வாயுக்களை உமிழ்கின்றன. டயாக்சின் ஒரு புற்று நோய்க்காரணி என்பதோடு டெல்லியின் ‘ஓக்லா’ குப்பை எரிவுலையானது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக டயாக்சின்களை உமிழ்ந்ததை முன்னிட்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சமீபத்தில் அதற்கு 25 லட்சம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேரடியாக நரம்புமண்டலத்தைத் தாக்கும் கொடிய நச்சான பாதரசம், புத்திக்கூர்மையை பாதித்து நடத்தைகளைப் பாதிக்கும் ஈயம் (Lead), கண் மூக்குத் தொண்டை எரிச்சலை உருவாக்கி சுவாசக் கோளாறுகளை உருவாக்கும் நைட்ரஜன் ஆக்சைடு போன்றவை குப்பை எரிவுலைகளிலிருந்து வெளியாகின்றன.
உலகின் மிகமோசமான ஆற்றல் மூலமாகக் கருதப்படும் நிலக்கரிக்கு சமமான கார்பன் மோனாக்சைடு மேலும் நிலக்கரியைவிட மூன்று மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, ஐந்து மடங்கு அதிக பாதரசம், ஆறு மடங்கு அதிகமான ஈயம், 27 மடங்கு அதிக ஹைட்ரோ குளோரிக் அமிலம் ஆகியவை குப்பை எரிவுலைகளிலிருந்து வெளியாகின்றன.
- நீர் நில மாசுபாட்டை உருவாக்கும் குப்பை எரிவுலைகள்
வளர்ச்சியின் நெருக்கடியில் சிக்கித் தவித்தாலும்கூட சென்னை இன்னும் பல்வேறு நீர்நிலைகளை உள்ளடக்கியிருக்கிறது. குப்பை எரிவுலைகளிலிருந்து வெளியாகும் சாம்பல் நுண்துகள்கள் காற்றால் பலகிலோமீட்டர் தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ரெட்டேரி, புழலேரி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் கலப்பதோடு வீடுகளிலும் அருகாமை உணவகங்களிலும் தயாராகும் உணவுப் பொருட்களையும்கூட மாசுபடுத்தக்கூடியவை. தரையில் படியும் நச்சுக்களும் மழைநீரோடு கலந்து நிலத்தடி நீரை மாசுபடுத்தக்கூடியது. இது ஒட்டுமொத்த சென்னையின் உணவுச் சங்கிலியிலும் நச்சுக்கள் கலப்பதற்கான சாத்தியத்தை உருவாக்குகிறது.
- நச்சுத் திடக்கழிவு எச்சங்களை உருவாக்கும் குப்பை எரிவுலைகள்
இந்த குப்பை எரிவுலைகள் எல்லா குப்பைகளையும் எரித்து அழித்துவிடுபவைபோலத் தெரிந்தாலும் கனவுலோகங்கள் உள்ளிட்ட அதிக நச்சுத் தன்மை வாய்ந்த சாம்பலை எச்சமாக உருவாக்குகின்றன. இந்த சாம்பலைக்கொண்டு நடைபாதைக் கற்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த நச்சு சாம்பல் அதனைக் கையாள்பவர்களையும் பாதிக்கும் என்பதோடு அந்த நடைபாதைக் கற்களும் நாளடைவில் தம் நச்சுக்களை சூழலில் கசியச் செய்யவே வழிவகுக்கும்.
சாம்பலில் இருக்கும் நச்சுக்கள் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும்பட்சத்தில் அது நிலத்தில் பாதுகாப்பாகக் கொட்டப்பட வேண்டுமென்று ஆவணம் குறிப்பிடுகிறது. ஏற்கனவே ஒப்பீட்டளவில் சற்று பரவாயில்லை என்று சொல்லத்தக்க நிலக்கரி மின்னிலையங்களின் சாம்பல் கொட்டப்படும் வடசென்னைப் பகுதிகளின் அவலம் நாம் அறிந்ததே. நடைமுறையில் இந்த சாம்பலைக் கையாள்வதும் பாதுகாப்பதும் சாத்தியமற்றது என்பதோடு அது அபாயகரமானதும்கூட.
- காலநிலை மாற்றத்தைத் தூண்டும் குப்பை எரிவுலைகள்
கொடுங்கையூர் குப்பை எரிவுலையானது 2,000 மெட்ரிக் டன்கள் குப்பையை எரிப்பதன் மூலமாக சுமார் 3,400 மெட்ரிக் டன் கார்பனை ஒவ்வொரு நாளும் உமிழவிருக்கிறது. இது 10 லட்சம் கார்களின் உமிழ்வுக்கு சமமாகும்.
‘சென்னை காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை அறிக்கை’யானது (CCAP) மிகத்தெளிவாக குப்பை எரிவுலைகள் மிக அதிக கார்பன் உமிழ்வை உள்ளடக்கியவை என்றும் ஆகவே தவிர்க்கப்பட வேண்டியவை என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்காக அண்ணா பல்கலைக்கழகம் செய்த ஆய்வின் அறிக்கையும் கழிவிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டமானது மிக அதிகக் கார்பன் உமிழ்வை உருவாக்குவது என்று குறிப்பிடுகிறது. ஒரு சராசரியான நிலக்கரி மின்னிலையத்தைவிட குப்பை எரிவுலையானது 65 விழுக்காடு அதிக கார்பன் உமிழ்வுக்குக் காரணமாக இருக்கிறது.
காலநிலை மாற்றத் தீவிர நிகழ்வுகள் உச்சம் பெற்றுவரும் சூழலில் அரசு அதற்கு எதிரான நடவடிக்கைகளை ஒருபுறம் எடுத்துக்கொண்டே இன்னொருபுறம் இதுபோன்ற சூழல்விரோதத் திட்டங்களை மாநிலம் எங்கும் (சென்னையைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இந்த எரிவுலைகள் அமைக்கப்படவிருக்கின்றன) விரிவுபடுத்துவதானது இங்கு முன்னெடுக்கப்படும் சரியான நடவடிக்கைகளால் ஏற்படும் நல்விழைவுகள் அனைத்தையும் நாசம் செய்துவிடும்.
- சரியான குப்பை மேலாண்மையை சிதைக்கும் குப்பை எரிவுலைகள்
சூழலுக்குப் பாதுகாப்பான ‘கழிவில்லாமையை’ (zero waste) இலக்காகக்கொண்ட குப்பை மேலாண்மையானது குப்பைக் கிடங்குகள் இல்லாத நிலையை (zero landfill) இலட்சியமாகக் கொண்டிருப்பதோடு குப்பையை அதன் உருவாக்கத்திலேயே குறைப்பதை (Refuse / Reduce) முதன்மைப் படிநிலையாகவும் மறுசுழற்சி போன்றவற்றை இரண்டாம் கட்டமாகவும் உள்ளடக்கியிருக்கிறது. ஆனால், கழிவிலிருந்து மின்சாரம் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சூழலில் அதற்கு ஒவ்வொரு நாளும் நல்ல எரிதிறன்கொண்ட நெகிழி உள்ளிட்டக் கழிவுப் பொருட்கள் கிடைப்பது அவசியமாகிறது. ஆகவே இது ஒட்டுமொத்த குப்பை மேலாண்மையையும் சிதைத்து குப்பைகளின் அளவை அதிகரிக்கக் காரணமாக அமைகிறது.
உதாரணமாக, PET புட்டிகள் நல்ல சந்தை மதிப்புடைய ‘குறைசுழற்சி’ (Downcycling) மூலம் பாலியெஸ்டர் இழைகளையும் ஆடைகளையும் உருவாக்கக்கூடிய சாத்தியமுள்ள நெகிழிப் பொருட்களாகும். இந்த திட்ட ஆவணமானது இந்த PET புட்டிகளையும் எரிப்பதை உள்ளடக்கியதாக இருப்பதன்மூலம் மறுபயன்பாடு அல்லது மறுசுழற்சி செய்யத்தக்க கழிவுகளைக்கூட எரித்துக் கரியாக்கி இயற்கை வளங்களை வீணடித்து அவற்றின் தேவையையும் – அதனால் ஏற்படும் உமிழ்வையும் மறைமுகமாக இவை அதிகரிக்கின்றன.
- வாழ்வாதாரத்தை அழிக்கும் குப்பை எரிவுலைகள்
ஏழ்மை இவ்வுலகில் இருப்பதாலேயே மறுசுழற்சி இருக்கிறது என்பார்கள். நம் நாட்டில் நடக்கும் குறைந்தபட்ச மறுசுழற்சிக்கு விளிம்பு நிலையிலிருக்கும் ஏராளமான முறைசாரப் பணியாளர்களே காரணமாக இருக்கின்றனர். அவர்களின் அரை வயிற்றுக்காவது உணவு இடுவதில் இந்த மறுசுழற்சி செய்யத்தக்க குப்பைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. எரிதிறன் மிக்க குப்பைகளும் மறுசுழற்சி செய்யத்தக்க உலோகங்கள், கண்ணாடி உள்ளிட்டக் கழிவுகளும் நேரடியாக இத்தகைய ஒருங்கிணைந்த குப்பை மேலாண்மை நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதன்மூலமாக ஆயிரக்கணக்கான குப்பைகள் சேகரிக்கும் தொழிலாளர்கள் நேரடியாக அவர்களின் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். குப்பை எரிவுலைகளை இயக்க மிகக்குறைந்த பணியாளர்களே தேவைப்படுவதால் திறன்மிக்க குப்பை மேலாண்மையின் ஏராளமான பசுமைப் பணிகளுக்கான வாய்ப்புகளை அவை அழிக்கின்றன.
- சூழல் நீதிக்கு முரணான குப்பை எரிவுலைகள்
ஒரு தனிநபர் அல்லது வட்டாரத்தின் வாழ்க்கைத் தரம் அல்லது பொருளாதார நிலையைப் பொறுத்து அவர்கள் உருவாக்கும் குப்பைகளின் வகையும் அளவும் வேறுபடுகிறது. பொருளாதார நிலையில் உயர்ந்தவர்கள் உருவாக்கும் குப்பைகள் அதிகம் மட்காத பொருட்களைக் கொண்டவையாகவும், அளவில் அதிகமாகவும் உள்ளன. வடசென்னையும் சென்னையின் பிற பகுதிகளும் பொருளாதார நிலையில் பாரதூர வேறுபாடுகள் கொண்டவை. இப்படியிருக்க ஒட்டுமொத்த சென்னையின் வசதி வாய்ப்புள்ள மக்கள் உருவாக்கும் பெருமளவிலான குப்பைகளை அவற்றுக்குக் மிகக்குறைந்த அளவிலேயே காரணமாக இருக்கும் வடசென்னைப் பகுதியில் எரித்து அழிப்பது எவ்வகையில் நீதியாகும்? வடசென்னையின் சின்ன மாத்தூர் மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் தினமும் 60 மெட்ரிக் டன்கள் அளவிற்கு கழிவுகளை எரிக்கும் நிலையங்கள் அமைந்திருப்பதும் அவை ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளை அப்பகுதிகளில் உருவாக்கி வருவதும் இங்கே குறிப்பித்தக்கது.
வடசென்னையானது பல்வேறு அபாயகரமான தொழிற்சாலைகளாலும் சமூகப் பொருளாதார காரணிகளாலும் அன்றாடம் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றது. மணலி, எண்ணூர் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் அனல் மின்னிலையங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளால் அன்றாட காற்று மாசுபாடு அளவீடானது மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு நச்சுவாயுக் கசிவு போன்றவை மேலும் நிலமையை மோசமாக்கி அப்பகுதியில் உயிர்வாழ்வதற்கான தாங்கு திறனையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் சூழலில் மேலும் மிகமோசமான நிலையை உருவாக்கவல்ல கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டமானது சூழல் நீதியின் அடிப்படையில் சற்றும் ஏற்புடையதல்ல.
- குப்பை மேலாண்மையில் தனியார் மயமாக்கமும் சமூக நீதியும்
அரசு தொடர்ந்து குப்பை மேலாண்மையை மாநிலமெங்கும் தனியாரிடம் ஒப்படைத்து வருகின்றது. வெறும் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பெருநிறுவங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சரியான பணிப்பாதுகாப்பையோ ஊதியத்தையோ வழங்குவதில்லை. துப்புரவுப் பணியாளர்கள் பாலியல் தாக்குதல்கள் உள்ளிட்டப் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதையும் மேட்டுக்குடி மக்களால் மனிதத்தன்மையின்றி நடத்தப்படுவதோடு பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதையும் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். மிக்குறைந்த ஊதியத்திற்கு பணிபுரியும் இவர்கள் இவற்றை எதிர்க்க நேர்ந்தால் வேலைகள் பறிபோகும் அபாயத்தில் இருக்கின்றனர். மேலாண்மையில் குறிப்பாக சாதியரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களே மிக அதிகமாக பணிபுரியும் சூழலில் தனியார்மயமாக்கமானது இவர்களை வறுமைக்கோட்டிற்கு உள்ளேயே வைத்திருப்பதோடு பணிப்பாதுகாப்பையும் மாண்பும் சுயமரியாதையும் மிக்க வாழ்வையும் தடுப்பதாக இருக்கிறது.
குப்பை மேலாண்மை பிரச்சினைகளுக்கு அடிப்படையான காரணம் என்ன?
ஆகப்பெரும்பாலான நம்முடைய நெகிழிப் பொருட்கள் முழுமையாக மறுசுழற்சி செய்யத் தக்கவை அல்ல. வெறுமனே குப்பைகளை வகைபிரித்து மறுசுழற்சி செய்வதால் மட்டுமே நாம் உருவாக்கும் குப்பைகளை சரியாக மேலாண்மை செய்துவிட முடியாது. பொதுவாக இங்கிருக்கும் மோசமான குப்பை மேலாண்மை பிரச்சினைகளுக்கு பொதுமக்களின் பொறுப்பின்மையோ அல்லது அரசின் திறனின்மையோ காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கையாள முடியாத – மறுசுழற்சி செய்ய முடியாத – நச்சுக் குப்பைகளை உற்பத்தி செய்து சந்தையில் திணிக்கும் பெருநிறுவனங்களின் பொறுப்பின்மை பேசுபொருள் ஆகுவதில்லை.
குப்பைகளைக் கையாள்வதில் மக்கள் தங்களின் குறைந்தபட்ச பொறுப்புகளையும் சரியாக நிறைவேற்றவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும்கூட, கட்டுப்பாடற்ற ஒற்றை பயன்பாட்டுப் பொருட்களின் உற்பத்தியே கையாள முடியாதக் கழிவுகளின் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது. அரசு தடை செய்திருக்கும் சில ஒற்றை பயன்பாட்டுப் பொருட்களைத் தாண்டி பெரும்பாலான பெருநிறுவன நுகர்பொருட்களின் பொட்டலங்கள் (மசாலாக்கள், நொறுக்குத் தீனிகள், டெட்ராபேக் குளிர்பானங்கள் போன்றவை) ஒற்றைப் பயன்பாட்டுப் பொருட்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பல நேரங்களில், இந்த கட்டுப்பாடற்ற உற்பத்தியால் அதிக இலாபமீட்டும் நிறுவனங்களே மோசமான குப்பை எரிவுலைகளைத் தீர்வுகளாக முன்னிறுத்தி தங்கள் குப்பைகளின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்பவையாகவும் இருக்கின்றன.
போலியான தீர்வுகளும் சரியான தீர்வுகளும்!
சாலைகள் மற்றும் கடற்கரைகளை சுத்தம் செய்தல், நெகிழிச் சாலைகளை அமைத்தல், குப்பைகளை எரித்தல், மட்கும் நெகிழியை மாற்றாக முன்னிறுத்துதல் போன்ற எந்தவொரு முன்னெடுப்புகளும் முழுமையாக குப்பைப் பிரச்சினைகளைத் தீர்ப்பவை அல்ல என்பதோடு பலநேரங்களில் கூடுதல் பாதிப்புகளை உள்ளடக்குபவையும்கூட. ஆகவே, கழிவிலிருந்து மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட குப்பைகளைக் குறைக்க உதவாத இத்திட்டங்களை போலித்தீர்வுகள் என்கிறோம்.
இவற்றுக்கு மாறாக, திறன்மிக்கக் கழிவில்லாமையை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக நம்மால் ஏராளமான பசுமை வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிவதோடு நச்சுக் கழிவுகளின் கசிவைக் கட்டுப்படுத்தி சூழல் நலனையும் சமூக நலனையும் மேம்படுத்த முடியும். கழிவுகள் மேலாண்மையில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு துளி பணமும் அரசின் சுகாதாரத் துறையின் பழுவைக் குறைக்கப் பெருமளவில் உதவும்.
மாநகராட்சியானது தொடர்ந்து குப்பைகளை வகைபிரித்துப் போடுவதற்கு பொதுமக்களை வலியுறுத்தி வந்தாலும்கூட குறைந்தபட்சமாக, மட்கும் கழிவுகளை முழுமையாக மட்கச் செய்யும் உட்கட்டமைப்புகள்கூட அதனிடம் இல்லை என்பதே உண்மை. இருக்கும் மட்கும் நிலையங்களும் அவற்றின் முழுத்திறனோடு செயல்படவில்லை. CCAP அறிக்கையானது சென்னையின் குப்பை மேலாண்மையானது கடும் போதாமைகள் நிரம்பியதாகவும் மிகமோசமான இலக்குகள் கொண்டதாகவும் இருப்பதை வெளிப்படுத்துகிறது.
சென்னை உட்படத் தமிழ்நாடு முழுதும் அமைக்கப்பட்டிருக்கும் கழிவிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் 47 நிலையங்களில் வெறும் பத்து மட்டுமே செயல்பாட்டில் இருக்கின்றன. குப்பைகளை மறுசுழற்சிக்காக வகைபிரிக்கும் நிலையங்கள் போதுமானவையாக இல்லை. இருக்கும் நிலையங்களும் முழுமையான செயல்பாட்டில் இல்லை. பெரும்பாலும் சூழல் – சமூக நலனுக்கு முரணான மையப்படுத்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மையே நடைமுறையிலிருக்கிறது. அமலிலிருக்கும் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழித் தடை பயனற்றதாகியிருக்கிறது. அரசுத் துறை வளாகங்கள் உள்ளிட்ட எங்கும் மிக எளிதாக தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் இதுவரையிலும் ஒற்றை எண்ணிக்கையில்கூட பாதுகாக்கப்பட்ட கழிவு நிரப்பிடம் (Scientific landfill) அமைக்கப்படவில்லை. ஒருபுறம் வகைபிரிக்கப்படாத கழிவுகளை கொட்டிக்கொண்டே இன்னொருபுறம் ‘பயோ மைனிங்’ பலகோடிகள் செலவில் நடந்து வருகிறது. இத்தனைக் குறைபாடுகளை சரிசெய்தாலே கணிசமான அளவிற்கு குப்பைகளைத் திறம்பட பாதுகாப்பாகக் கையாள முடியும்.
நெகிழிக் குப்பைகளுக்கான மூலப்பொருளான பெட்ரோகெமிக்கல் தொழில்களுக்குக் கொடுக்கப்படும் மானியங்களை சூழலுக்குப் பாதுகாப்பான துணிப்பைகள், பனை ஓலைகள் – வாழையிலை போன்ற பொருட்களைக்கொண்டு உருவாக்கப்படும் பொட்டலங்கள், மறுபயன்பாடு / மறுநிரப்புதல் செய்யப்படக்கூடிய பொட்டலங்களுக்குத் (Reusable and Refillable packaging systems) திசைதிருப்பி அவற்றை மலிவாக்குவதன் மூலமாகக் கையாள முடியாத கழிவுகளை அவற்றின் உற்பத்தியிலேயே பெருமளவில் குறைக்க முடியும். இவை நீண்ட கால அளவில் முழுமையான கழிவில்லாமையை அடையத் துணை செய்யும்.
இறுதியாக…
சூழல் நெருக்கடிகளும் காலநிலை மாற்றமும் உச்சம் பெற்று வரும் காலத்தில், சூழலுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பான, கார்பன் உமிழ்வற்ற, குப்பை மேலாண்மையைத் தேர்ந்தெடுப்பதே விவேகமான செயலாகும். இந்தப் பின்னணியில், சென்னையிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமையவிருக்கும் அபயாகரமான கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைக்கிறோம்.
தொடர்புக்கு:
ஜீயோ டாமின்(பூவுலகின் நண்பர்கள்)
7708020668
விஷ்வஜா சம்பத்(CCAG) – 9629505983
சைத்தன்யன் (CFA) – 96003 29935
வம்சி (CAG) – 94938 92929
அமைப்புபுகள் பற்றி:
அமரர் நெடுஞ்செழியன் அவர்களால் தொடங்கப்பட்டப் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பானது கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் – சூழல் அரசியல் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்குவதிலும் சூழல் நீதியை நிலை நாட்டுவதிலும் எல்லா வகையான ஜனநாயகப்பூர்வமான வழிகளிலும் செயல்படும் மக்கள் இயக்கமாகும்.
‘Centre for Financial Accountability (CFA)’ அமைப்பானது வளர்ச்சி, மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட அம்சங்களில் தேசிய மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் தாக்கங்களைக் கண்காணித்து அவற்றை விமர்சனப்பூர்வமாகத் திறனாய்வு செய்யும் நிறுவனமாகும்.
‘Citizen consumer and civic Action Group’ (CAG) அமைப்பானது கடந்த 38 ஆண்டுகாலமாக இயங்கி வரும், இலாப நோக்கமற்ற, மற்றும் அரசியல் சாராத அமைப்பாகும். இது, நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பங்கேற்பு முடிவு உள்ளிட்ட நல்லாட்சி செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும் செயல்படுகிறது.
‘Chennai Climate Action Group’ (CCAG) அமைப்பானது சூழல் நீதியையை மையமாகக் கொண்டு விளிம்புநிலை மக்கள் மற்றும் போதிய பிரதிநிதித்துவம் பெறாத சமூகங்கள் உள்ளிட்ட எல்லா உயிர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக பணியாற்றும் இளைஞர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் குழுவாகும்.