பூனேயின் ‘திடக்கழிவு சேகரிப்பு மற்றும் கையாளுதல் கூட்டுறவு’ (The Solid Waste Collection and Handling cooperative or SWaCH) அமைப்பானது மூன்றாயிரத்து தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட சுய-தொழில் செய்யும் உறுப்பினர்களைக் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய குப்பை சேகரிக்கும் தொழிலாளர் கூட்டமைப்பாகும். முற்றிலும் தொழிலாளர்களுக்கு சொந்தமான கூட்டுறவு அமைப்பாக ‘காகத் கச் பத்ரா காசட்கரி பஞ்சாயத்து’ ((Kagad Kach Patra Kashtakari Panchayat (KKPKP)) எனும் தொழிற்சங்கத்தினால் மகாராஷ்டிராவின் புனேவில் கடந்த 2005ம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நேரடியாக குப்பைகளைச் சேகரிக்கும் இந்த அமைப்பு பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த பெண்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதுமான கழிவு மேலாண்மை முறைகளுக்கு கலங்கரை விளக்கமாக திகழும் இந்த முன்மாதிரி அமைப்பானது ‘ஆம் எனது கொல்லைப் புறத்தில்தான்’ (Yes In My BackYard, YIMBY) என்ற முழக்கத்தினை முன்னெடுத்து புனே மக்களால் கொண்டாடப்படுகிறது. “கழிவு மேலாண்மைக்கு எனது கொல்லைப் புறத்தில் இடமில்லை” என்று பொருள்படும் ‘Not in my Backyard’ என்ற முழக்கத்திற்கு முரணாக இது புது அர்த்தத்தைத் தருகிறது.
சமூக நீதியின் உள்ளே!
1990களின் தொடக்கத்தில் புனேவின் குப்பை பொறுக்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும் பட்டியலினத்தைச் சார்ந்த பெண்களாகவே இருந்தனர். நகர கழிவுப் பொருளாதாரத்தின் சுரண்டல், துன்புறுத்தல், சரியான அங்கீகாரமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்ட இவர்கள், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை குப்பை மேடுகளிலிருந்து சேகரித்து அதன் மூலம் சொற்ப வருமானம் ஈட்டி வந்தனர். சமூகத்தால் தொடர்ச்சியாக அவமதிக்கப்பட்டு வந்த இவர்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலேயே பணி செய்து வந்தனர்.
Dr. பூர்ணிமா சிக்கர்மானே மற்றும் லக்ஸ்மி நாராயணன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் இந்த தொழிலாளர்களை ஒருங்கிணைத்து KKPKP அமைப்பை நிறுவி, தொழிலாளர்களை தோட்டிகள் என்றழைக்காமல் சுற்றுச்சூழல் பங்களிப்பாளர்களாக அங்கீகரிக்க கோரிக்கை விடுத்தனர். 1993ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அணிதிரட்டிய இந்த அமைப்பு, அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி போன்றவற்றை உறுதி செய்ததுடன், சாதிய ரீதியாக கல்வி மறுக்கப்படுதலையும் எதிர்த்தது. “குப்பை எங்களின் உரிமை” என்ற KKPKP-ன் தொடர் முழக்கமானது இயற்கை வளங்கள் மீதான விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உரிமையை போன்று மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளின் மீதான உரிமை குப்பை பொறுக்கும் தொழிலாளர்களுடையது என்பது வலியுறுத்துகிறது.
இந்தியாவின் தாராளமயமாக்கலுக்கு பிறகு தனியார் மூலதனத்திற்கு ஆதரவான எரிவுலை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவது இவர்களால் எதிர்க்கப்பட்டது. மேலும், பயனாளர்களிடம் கட்டணம் வசூலித்து அதன் மூலமாக தொழிலாளர்கள் நடத்தப்படும் இந்த ‘ஸ்வாச்’ (SWaCH) முன்மாதிரியானது, லாபத்தை அடிப்படையாக கொண்ட நவதாராளமய கொள்கைகள் சார்ந்த முன்னெடுப்புகளை எதிர்த்து தொழிலாளர் நலனை உள்ளடக்கிய நீடித்த சுற்றுச்சூழல் அமைப்பை முன்னிறுத்துகிறது. 2008ம் ஆண்டு புனே மாநகராட்சிக்கும், தொழிலாளர்களின் இந்த அமைப்புக்கும் இடையில் அமைக்கப்பட்ட கூட்டணியானது ஏழைகளை முன்னிறுத்தும் கூட்டணிக்கான முன்னுதாரணமாக திகழ்வதுடன், தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளில் 90 டன்களுக்கும் மேற்பட்ட குப்பைகளை மறுசுழற்சியை நோக்கி திசை திருப்புவதன் மூலம், ஆண்டொன்றுக்கு மாநகராட்சியின் போக்குவரத்து செலவீனத்தில் சுமார் 2 கோடி ரூபாய்க்கும் மேல் குறைக்கிறது.
“ஆம் எனது கொல்லைப் புறத்தில்தான்” முன்மாதிரியின் மையக்கரு
பரவலாக்கப்பட்ட (decentralised) குப்பை மேலாண்மை (குப்பைகளை அது உற்பத்தியாகும் இடத்திலேயே கையாளுதல்) என்பது ஸ்வாச் அமைப்பின் YIMBY முன்மாதிரியின் மையக்கருவாகும். “பரவலாக்கம் நம்மை ஒன்றும் கற்காலத்திற்கு அழைத்து செல்லபோவதில்லை” என்கிறார் இந்த ஸ்வாச் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான லூப்னா அனந்தகிருஷ்ணன். மேம்படுத்தப்பட்ட உரமாக்கல், உயிரி எரிவாயு உற்பத்தி மற்றும் உலர் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், போன்றவற்றில் மக்களை மையப்படுத்திய தொழில்நுட்பங்களை தழுவியது அவர்களின் இந்த முன்மாதிரியாகும். அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண கூடங்கள் மற்றும் தங்கும் உணவு விடுதிகள் போன்ற அதிகளவில் குப்பை உற்பத்தியாகும் இடங்களிலேயே அவர்களின் குப்பைகளை உரமாக்கும் அமைப்புகள், உயிரி எரிவாயு உற்பத்தி அமைப்புகளை கொண்டு கழிவு மேலாண்மை செய்யும் நிர்வாக மற்றும் பராமரிப்பு சேவையையும் ஸ்வாச் வழங்குகிறது. “பெருமளவிலான குப்பைகளை கையாள புனே நகராட்சி வசூலிக்கும் பயனாளர் கட்டணத்தை விட இத்தகைய குப்பை உற்பத்தியாளர்கள் தங்கள் இடங்களிலேயே பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை அமைப்பை நிறுவி, நிர்வகிப்பதன் செலவு குறைவு” என ஸ்வாச் கூட்டுறவு அமைப்பின் தகவல் தொடர்பு நிர்வாகி சுபாங்கி யோகேஷ்வர் கூறுகிறார். மேலும், “தங்கள் இடங்களிலேயே இத்தகைய பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை அமைப்புகளை நிறுவுவதற்கான வரி சலுகைச் சார்ந்த உதவிகளையும் புனே நகராட்சி வழங்குகிறது” என ஸ்வாச் அமைப்பின் இயக்குநர் ஹர்ஷத் தெரிவிக்கிறார். ஒரு டன் கழிவிற்கு குப்பையிலிருந்து மின்சாரம்(WTE) என்ற குப்பை எரிவுலை முறை 0.1 வேலை வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கும் நிலையில், ஒரு டன் கழிவிற்கு 3.5 வேலை வாய்ப்புகளை இந்த ஸ்வாச் முன்மாதிரி உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வாச் மற்றும் KKPKP போன்ற முன்மாதிரிகள் சாதி, பாலினம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு சவால் விடுத்து ஒடுக்கப்ட்ட தொழிலாளிகளான குப்பை பொறுக்கும் தொழிலாளர்களை அதிகார பெற்ற சேவை வழங்குபவர்களாக மாற்றி சமூக நீதியை நிலைநாட்டுகின்றன. அமைப்பாகத் திரட்டப்பட்ட எதிர்ப்பானது எவ்வாறு நகர கட்டமைப்பை மாற்றியமைத்து தொழிலாளர்களின் கண்ணியத்தையும், சுற்றுச்சூழல் நலனையும் முன்னிறுத்தும் என்பதற்கு சென்னைக்கான ஒரு பாடமாகவும் இந்த முன்மாதிரி திகழ்கிறது. தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டத்தை காணும் சென்னை, இத்தகைய முன்மாதிரிகளின் பின்பற்றி செயல்படுவது தரமான வேலைகளை வழங்குவதோடு மட்டுமல்லாது கழிவு மேலாண்மைத் துறையின் தொடக்க நிறுவனங்களுக்கு வழிகாட்டியாகவும் திகழும்.
இதையை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்.
Centre for Financial Accountability is now on Telegram and WhatsApp. Click here to join our Telegram channel and click here to join our WhatsApp channeland stay tuned to the latest updates and insights on the economy and finance.