By

பூமியில் இதுவரையிலும் வாழ்ந்து மடிந்த கோடிக்கணக்கான விலங்குகளிலேயே மனித இனம்தான், தனது உயிரியல்ரீதியான இருத்தலுக்குத் தேவையான ஆற்றலைவிட அதிக ‘ஆற்றல்’ பசியுடையதாய் இருக்கிறது. பசித்த விலங்கு பெரும் ஆவேசத்துடன் இரையைத் தேடுவதுபோல நாம் பயணிக்கும் இடங்களில் எல்லாம் நமது கண்கள் ‘Plug Point’ ஐத் தேடுகின்றன. தொழில்நுட்பங்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த ஆற்றலுக்கானத் பசியும் ஏக்கமும் பன்மடங்காக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. தனிப்பட்ட வகையில் நமது மின்னுபகரணங்கள் முன்பைவிடவும் மிகுந்த ஆற்றல் திறனுடையவையாய் மாறியிருந்தாலும்கூட நமது ஒட்டுமொத்த ஆற்றலுக்கான தேவையானது நாம் கனவு காணும் எல்லையற்றப் பொருளாதார வளர்ச்சியைப்போலவே வளர்ந்துகொண்டே இருக்கிறது.

ஆனால் கெடுவாய்ப்பாக, தொடர்ந்து தடையற்ற ஆற்றல் தருமளவிற்கு இப்புவியில் புதைபடிம எரிபொருட்கள் அபரிமிதமாய் இல்லை என்பதோடு அவற்றின் பயன்பாடு நம் நாகரீகங்களையும் இருத்தலையும் சிதைத்து ஒட்டுமொத்த உயிர் வாழ்வையும் அழித்துவிடுமளவிற்கு மிகமோசமான பின்விளைவுகளை உருவாக்குவதாய் இருக்கிறது. இந்த பின்னணியிலேயேதான் ‘மாசில்லா எரிசக்தி’க்கான ஏக்கம் மனித குலத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய மின் தேவைகளைத் தொடர்ந்து இப்படியே பன்மடங்காக அதிகரித்தபடியே காற்றிலிருந்தோ, கடலிலிருந்தோ, சூரியனிலிருந்தோ, இல்லை ஏதேனும் ஒரு குப்பையிலிருந்தோ ஆற்றலை மேலும் அபரிமிதமாய் பெற்றுவிட மனித சமூகம் துடித்துக்கொண்டிருக்கிறது.

இன்னொருபுறம், இந்த அதீத வளர்ச்சியில் அதிக அனுகூலம் பெறுவோருக்கும் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருப்போருக்கும் இடையே மின்னுகர்வில் பாரதூர வேறுபாடு நிலவுகிறது. மின்னொளியில் ஜொலிக்கும் நம் கோளின் இன்னொரு பக்கம் எந்த ஆற்றலாலும் எட்டமுடியாத தொலைவில் எப்போதும் இருளில் மூழ்கிக்கிடப்பதாக இருக்கிறது. இந்த காரிருளில் மூழ்கிக்கிடக்கும் சரிபாதிக்கும் மேலான உலகம்தான் இன்னொரு உலகத்தை ஒளிரச்செய்ய ஓயாது உழைத்துக்கொட்டிக் கொண்டிருக்கிறது.

காலநிலை நெருக்கடி நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்த உலகில் அதற்குக் காரணமான பெருநிறுவனங்களும், அவற்றின் தயவால் இயங்கும் ஆட்சியாளர்களும் தங்கள் கனவில் ஒளிரும் ‘மாற்று எரிசக்தி’க்கு ‘பசுமை ஆற்றல்’ என்று பெயரிட்டிருக்கின்றனர். அதோடு, ஓயாமல் தங்கள் சொல்லாலும் செயலாலும் அதற்குப் பச்சை வண்ணம் பூசி வருகின்றனர். தங்கள் சொகுசான மேட்டுக்குடி வாழ்வைத் தக்க வைக்க விரும்பும் பெருவாரியான மனிதர்களும்கூட உண்மையிலேயே இப்படி பச்சைப் பசேலென்ற – மாசற்ற – உமிழ்வற்ற – நச்சற்ற – யாருக்கும் எதற்கும் கெடுதலற்ற ஒரு பசுமையான ஆற்றல் இருப்பதாகவும் விரைவில் அது பெருவெள்ளமாய் பொங்கிவருமென்றும் நம்புகின்றனர்.

உண்மையிலேயே இந்த உலகில் அப்படியான ஒரு பசுமை ஆற்றல் இருக்கிறதா?

பெரும்பாலும் இங்கு பசுமை ஆற்றல் என்று சொல்லப்படும் எல்லா மாற்று மின்னுற்பத்தி முறைகளும் அவற்றின் கார்பன் வழித்தடம் ஒப்பீட்டளவில் புதைபடிம எரிபொருட்களைவிடக் குறைவாக இருப்பதாலேயே அப்பெயரைப் பெறுகின்றன. ஆனால், வெறுமனே கார்பன் உமிழ்வைக் குறைப்பதால் மட்டுமே இப்புவி சொர்க்கமாக மாறிவிடுமா? கார்பன் உமிழ்வும் காலநிலை மாற்றமும் மட்டுமா இப்புவியின் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்?

சூரிய மின்னாற்றலை எடுத்துக்கொள்வோம். மூலப்பொருட்களுக்கான அகழ்வு, போக்குவரத்து, தயாரிப்பு, பயன்பாடு, கழிவுநீக்கம் என்ற ஒவ்வொரு படிநிலையையையும் உள்ளடக்கி கணக்கிட்டால் இதுவும் குறிப்பிடத்தக்க கார்பன் உமிழ்வை உள்ளடக்கியதே. இவற்றைப் புறந்தள்ளி விட்டால்கூட சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்வதற்கான சூரிய மின்தகடுகள், மின்சாரத்தை சேமிப்பதற்கான மின்கலங்கள் இவற்றின் உற்பத்தி – பயன்பாடு – மறுசுழற்சி – கழிவுநீக்கம் ஆகிய ஒவ்வொன்றும் கடுமையான சூழல் தாக்கத்தை உள்ளடக்கியவை.

சூரிய மின்தகடுகளில் மிக்குறைந்த அளவிற்கு வெள்ளி மற்றும் தாமிரம் போன்ற மதிப்புள்ள உலோகங்களும் கேட்மியம், ஈயம் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த கனவுலோகங்களும் கலந்திருக்கின்றன. காலாவதியான மின்தகடுகளை முழுமையாக மறுசுழற்சி செய்வதற்கோ அல்லது மறுபயன்பாடு செய்வதற்கோ இதுவரையிலும் எந்த பாதுகாப்பான வழிமுறைகளும் கண்டறியப்படவில்லை. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இவை திடக்கழிவு மேலாண்மையில் கையாள முடியாத அளவிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தாலாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் தொழில்நுட்பரீதியாக இவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்தும் வாய்ப்புகள் இருந்தாலும்கூட அவை நடைமுறையில் செலவு பிடிக்கக் கூடியதாகவும் ஆகவே மலிவுவிலையில் கிடைக்கும் மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர் படையின் தேவையை உள்ளடக்கியதாகவுமே இருக்கின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. அருவெறுக்கத்தக்க வகையில், இந்த ‘மேட்டுக்குடி குப்பை’யை விளிம்புநிலை மக்களுக்கான மலிவுவிலை வீடுகளாக மாற்ற முடியுமா என்ற ஆராய்ச்சியும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த அநீதிக்கு ‘upcycling’ என்ற பெயர்வேறு!

சூரிய மின்சாரம் காற்றாலைகள் போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மின்னுற்பத்தி செய்யக்கூடியவை. ஆகவே அந்த மின்சாரத்தை சேமித்து பயன்படுத்த மின்கலங்கள் அத்தியாவசியமானவையாய் இருக்கின்றன. இந்த மின்கலங்கள் குறைந்த ஆயுள் கொண்டவையாகவும் – சிக்கலான வேதித் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவையாகவும் – முழுமையான மறுசுழற்சிக்கான சாத்தியமற்றதாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக அபாயகரமான கழிவாகவும் இருக்கின்றன. இவையும்கூட, ‘மறுசுழற்சி’ என்று சொல்லப்படும் ‘குறைசுழற்சி’க்கு (Downcycling) விளிம்புநிலை சமூகங்களையே நம்பியிருக்கின்றன. உலகின் ஒட்டுமொத்த வாகனங்களையும் மின்வாகங்களாக மாற்ற வேண்டுமானால் ஆப்பிரிக்கா கண்டத்திற்கு சமமான அளவிற்கான புவிப்பரப்பை அகழ்ந்து நாசம் செய்ய வேண்டியிருக்கும் என்ற ஒரு சிறு தகவலே இந்த பசுமை ஆற்றலின் யோக்கியதையைச் சொல்ல போதுமானது. சுரங்கங்களால் ஏற்படும் சரிசெய்ய முடியாத சூழல் மற்றும் வாழ்வாதாரத் தாக்கங்களை நாம் உலகம் முழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். போதாக்குறைக்கு இந்த வளங்களைக் கைப்பற்றுவதற்கான ஒரு புதிய புவியரசியல் போட்டியும் நாடுகளிடையே கூர்மையடைந்து வருகிறது.

முத்தாய்ப்பாக, பூமியை ஏற்கனவே தமது அசுர சக்தியால் சூறையாடி – பொருளாதார ஏற்றத்தாழ்வால் பிழவுபடுத்தியிருக்கும் பெருநிறுவங்களே இந்த பசுமை மின்சாரத்தின் ஏகபோக அரசர்களாக கோலோச்சுகின்றனர். இந்தியாவில், ஒன்றிய அரசின் நண்பரான அதானி நிறுவனம் இவ்வகையில் பல பெரும் சூரிய மின்னுற்பத்தித் திட்டங்களைக் கையகப்படுத்தியிருப்பதும் அவற்றுக்கான உரிமங்கள், சுற்றுச்சூழல் அனுமதிகள், நிலம் கையகப்படுத்தல் மற்றும் மானியங்களில் பெரும் சித்து விளையாட்டுகள் நடந்திருப்பதையும் விவரிக்க தனியாக பல பக்கங்கள் தேவைப்படும். பெரும்பரப்பளவில் ஒரே இடத்தில் குவிக்கப்படும் இத்தகைய மையப்படுத்தப்பட்ட மின்னுற்பத்தித் திட்டங்கள் குறிப்பிட்ட வட்டாரத்தில் கடும் சூழல் மற்றும் வாழ்வாதாரத் தாக்கங்களைஉருவாக்குவதையும் நாம் பார்த்து வருகின்றோம்.

கணிசமான இயற்கை மூலப்பொருட்களின் பயன்பாட்டை உள்ளடக்கிய காற்றாலைகள், பல்லுயிர் அழிவு குறிப்பாகக் கடலுக்குள் நிறுவப்படும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகள், ஒலி மாசு போன்ற பல்வேறு கூடுதல் பிரச்சினைகளை உள்ளடக்கி இருப்பதோடு இவை சூழல் தாக்கத்தில் சூரிய மின்திட்டங்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவை அல்ல. இவற்றோடு, ஹைட்ரஜன் ஆற்றல் போன்ற பெரும்பொருட் செலவுமிக்க திட்டங்கள் பெருநிறுவங்களுக்கு இலாபங்களை அள்ளித் தருபவையாக இருப்பதில் வியப்பில்லை.

இதற்கிடையே எங்களையும் பசுமை மின்சாரத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று நாசகார அணுமின்சாரமும் கழிவை எரித்து மின்சாரம் பெறும் திட்டங்களும்கூட கதறிக்கொண்டிருக்கின்றன. அதாவது, ‘பசுமை’ என்ற பெயரைத் தாங்கியவை மட்டுமே இன்றைய காலநிலை மாற்ற சூழலில் செல்லும்படியாகும் என்பதால் எல்லா குப்பைகளும் தங்கள் பெயருக்குப் பின் பசுமை என்ற அடைமொழியை சேர்த்துக்கொள்ளத் துடித்துக்கொண்டிருக்கின்றன.

ஐபிசிசி அறிக்கையானது புவியைக் காலநிலை மாற்றப் பேரழிவிலிருந்து காக்க 2050 ஆம் ஆண்டுக்குள் ‘உமிழ்வில்லாமை’யை (net zero emission) அடைவதை முன்நிபந்தனையாக வைத்திருக்கிறது. இனியும் மரங்களை நட்டுக் காடுகளை வளர்த்து காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கால அவகாசங்களை நாம் எப்போதோ தாண்டி விட்டிருக்கிறோம். பெரும்பொருட்செலவில் உருவாக்கப்படும் பிரம்மாண்டமான கார்பன் உறிஞ்சு நிலையங்கள்கூட நாம் இன்று உமிழும் பெருமளவிலான கார்பனை உறிஞ்ச சிறிதும் போதுமானவையாக இல்லை.

இந்த சூழலில் நாம் ஏன் நமது ஆற்றலுக்கான பெரும்பசியை மறுபரிசீலனை செய்யக்கூடாது? நாம் ஏன் நமது வளர்ச்சி சித்தாந்தங்களை மீழாய்வுக்கு உட்படுத்தக்கூடாது?

வரம்பிற்குட்பட்ட வளங்களைக்கொண்ட இப்புவியில் – தொடர்ந்து வளங்களை சுரண்டக்கூடிய – கையாள முடியாத நச்சுக்குப்பைகளை உருவாக்கக்கூடிய – விளிம்புநிலை தொழிலாளர் படையின்மூலம் மட்டுமே சாதிக்கக்கூடிய – குறைந்த அளவிலேலும் கார்பன் உமிழ்வை உள்ளடக்கிய – கண்மூடித்தனமான மின்னுற்பத்தி எப்படி வளங்குன்றா வளர்ச்சியைத் தருவதாக இருக்கும்? பச்சை சாயம் பூசப்பட்ட இந்த பசுமை ஆற்றல் திட்டங்கள் உண்மையில் யாருக்கு வளங்குன்றாத வளர்ச்சியைத் தரப்போகின்றன?

காலநிலை மாற்றத்தாலும் வெப்பத்தாலும் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலிலும், பெருமழை, வெள்ளம், காட்டுத்தீ போன்றவை இப்பூவுலகைச் சூறையாடும் சூழலிலும்கூட புவியை கசக்கிப் பிழிந்து பசுமை மின்சாரமெடுத்து அதனைக் கொண்டு மேட்டுக்குடிகளுக்கான சொகுசு நுகர்பொருட்களை நாம் உற்பத்தி செய்துதான் ஆகவேண்டுமா? இத்தனை நெருக்கடிக்கும் சமரசங்களுக்கும் இடையே நம் நகரங்கள் நட்சத்திரங்கள்போல ஜொலித்துத்தான் ஆகவேண்டுமா? நம் விசாலமான விமானநிலையங்கள் இரத்தத்தை உறையச் செய்வதுபோன்று குளிரூட்டப்பட வேண்டுமா? வானுயர்ந்த கட்டிடங்களின் மின்னலங்காரங்களை நம்மால் கொஞ்சம் அணைத்து வைக்க முடியாதா? நாம் கொஞ்சம் நிதானமாக வளர்ந்தால்தான் என்ன?

இதுவொரு நெருக்கடி; வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவேயான நெருக்கடி!

இந்த நெருக்கடியிலும்கூட – மின்விசிறிக்கே வழியில்லாத பலகோடி மக்கள் வாழும் இந்த உலகில் – நமது பல்லடுக்கு வணிக வளாகங்களின் குளிரூட்டிகளும், மின்ஏணிகளும், செயற்கை நீரூற்றுகளும், அலங்கார மின்விளக்குகளும், ஆடம்பர – சொகுசுப் பொருட்களை உற்பத்தி செய்து குவிக்கும் தொழிற்சாலைகளும், சூழல்தாக்கமிக்கத் தனிநபர் வாகனங்களும் தடையின்றி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க வேண்டுமென்று எண்ணுவது பெரும் அநீதி இல்லையா?

நாம் மலிவாகிவருவதாய் நினைக்கும் மாற்று மின்சக்தியானது முழு வாழ்க்கை சுழற்சியிலும் அது உருவாக்கும் சூழல் மற்றும் சமூக தாக்கங்களுக்கான விலையை உள்ளடக்கியிருக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் இங்கு ஒரு விலையுண்டு; பச்சை நிறத்தில் காட்டப்படுவது எல்லாம் பசுமையானது அல்ல. இதற்கான உண்மையான விலையை நம் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் இரத்தமும் சதையுமான மனிதர்களும், பறவைகளும், விலங்குகளும், ஒட்டுமொத்த சூழலமைவும் சேர்ந்து சுமக்கின்றன.

‘வளர்ச்சி’ ஒருபோதும் வளங்குன்றாததாக இருக்கவே முடியாது. இந்த தொடர் வளர்ச்சிக்கு உந்துசக்தியாய் இருக்கும் மின்சக்தியும்கூட பசுமையாக இருக்கவே முடியாது. நம் தொழில்நுட்பங்கள் மற்றும் நாகரீகங்களின் ஆற்றல் பசியைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே – அதனை நியாயமற்ற, பாதுகாப்பற்ற மாற்று மின்சக்திமூலம் ஈடுசெய்வதைக் காட்டிலும் – நம் அத்தியாவசியமானத் தேவைகளுக்கு மட்டுமானதாய் மின்தேவையைக் கணிசமாகக் குறைப்பது மட்டுமே விவேகமானதாகவும் நியாயமானதாகவும் இருக்கும்.

இதை ஆங்கிலத்தில் படியுங்கள்

ஜீயோ டாமின் அவர்கள் 40 ஆண்டுகளாக செயல்படும் பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னார்வலராக செயல்படுகிறார். அவர் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த 15 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். திடக்கழிவு மேலாண்மை, நெகிழி, பசுமைக் கட்டிடங்கள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் செயல்படுகிறார்.