By

வட சென்னையின் கொடுங்கையூரில் முன்மொழியப்பட்ட குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் (WTE) எரிவுலையின் நிழலில் வாழும் சமூகங்களுக்கு, முதன்மையான கேள்வி மிகவும் தனிப்பட்டது: “இது என் குடும்பத்தின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்?” குப்பை நெருக்கடிக்கு ஒரு தொழில்நுட்ப தீர்வாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், வளர்ந்து வரும் சான்றுகள் இந்த ஆலைகளை முக்கிய மாசுபடுத்திகளாக அம்பலப்படுத்துகின்றன, அவற்றின் உமிழ்வை நாள்பட்ட சுவாச நோய்கள் முதல் புற்றுநோய் வரை கடுமையான சுகாதார பிரச்சினைகளுடன் இணைக்கின்றன. இது வெறும் கோட்பாடு அல்ல; ஹைதராபாத்தின் ஜவஹர்நகர் WTE ஆலைகள் குறித்த 2025 உண்மை கண்டறியும் அறிக்கை, WTE சுற்றியுள்ள சூழலில் ஈயம் மற்றும் பாதரசம் போன்ற நச்சு கன உலோகங்கள் ஆபத்தான அளவில் அதிகமாக இருப்பதை ஆவணப்படுத்தியது. இதேபோல், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) செப்டம்பர் 2025 இல் அம்பலப்படுத்தியது, இந்த ஆலைகளில் இருந்து நச்சு சாம்பல், ஆபத்தான அளவிலான டையாக்சின்கள் மற்றும் கன உலோகங்களைக் கொண்டுள்ளது, அவை பெரும்பாலும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுவதில்லை, இதனால் மண் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் உள்ளது.

மேலும், ஒரு காலத்தில் ஒரு திடக்கழிவுகளின் சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்ட WTE ஆலைகள் இப்போது “நகரங்களில் நச்சுக் காற்றை மோசமாக்குகின்றன” என்று ஆர்டிகிள்-14 (Article-14) என்ற பத்திரிகை   நடத்திய விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் குப்பைகளை எரிப்பதற்கும் கொடிய காற்று மாசுபாட்டிற்கும் உள்ள நேரடித் தொடர்பு குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, எரிப்பது திடக்கழிவுகளை காற்றில் பரவும் விஷமாக மாற்றுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஆர்டிகிள்-14 மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் நடத்திய விசாரணைகள் குறிப்பிடுவது போல, இந்த ஆலைகள் காற்றின் தரத்தை மோசமாக்குகின்றன என்றால், சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட மாசுபடுத்திகள் மற்றும் அவை மனித உடலுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம், இது ஒரு தகவலறிந்த பொது விவாதத்திற்கு அவசியம்.

நச்சு கலவை: எரிவுலையின் புகைபோக்கியில் இருந்து என்ன வெளிவருகிறது?

சுகாதார அபாயங்கள் ஒரு மாசுபாட்டால் ஏற்படுவதில்லை, மாறாக எரிக்கும் செயல்பாட்டின் போது வெளியிடப்படும் பொருட்களின் சிக்கலான வேதியியல் கலவையால் ஏற்படுகின்றன. ‘கழிவு எரிப்பு: மாசுபாடு மற்றும் சுகாதார தாக்கங்கள்’ குறித்த 2019 சர்வதேசிய எரிவுலைக்கான மாற்றுக்கான கூட்டமைப்பு’ (GAIA) தகவல் அறிக்கையில், கிடைக்கக்கூடிய சிறந்த ஆதாரங்களை ஒருங்கிணைக்கிறது, முக்கியமான கவலைகளை எடுத்துக்காட்டுகிறது:

  • டையாக்சின்கள் மற்றும் ஃபுரான்கள் (PCDD/Fs): இவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை, உணவுச் சங்கிலியிலும் மனித உடல் கொழுப்பிலும் சேரக்கூடிய நிலையான கரிம மாசுபடுத்திகள். இவை புற்றுநோய், நரம்பியல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளின் சீர்குலைவுடன் தொடர்புடைய மிகவும் சக்திவாய்ந்த புற்றுநோய் காரணிகள்.
  • நுண்துகள்கள் (PM10/PM2.5): இவை நுரையீரலுக்குள் ஆழமாக உள்ளிழுக்கப்படும் அளவுக்கு சிறியதாக இருக்கும் நுண்ணிய திட அல்லது திரவத் துகள்கள். இது ஆஸ்துமாவை அதிகரிக்கிறது, நாள்பட்ட நுரையீரல் நோயை ஏற்படுத்துகிறது, மேலும் மாரடைப்பைத் தூண்டுகிறது.
  • கன உலோகங்கள்: ஈயம், பாதரசம், காட்மியம் மற்றும் ஆர்சனிக் உள்ளிட்ட இவை நச்சுத்தன்மைக்கு பெயர் பெற்றவை. பாதரச வெளிப்பாடு மூளை, சிறுநீரகங்கள் மற்றும் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்துகிறது. பாதுகாப்பான அளவிலான வெளிப்பாடு இல்லாத ஒரு சக்திவாய்ந்த மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வேதிப்பொருளாக ஈயம் உள்ளது, இது இருதய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது மற்றும் குறிப்பாக குழந்தைகளின் மூளை  வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும்.
  • நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx) மற்றும் சல்பர் ஆக்சைடுகள் (SOx) போன்ற பிற மாசுபடுத்திகள் நுரையீரல் திசுக்களை சேதப்படுத்தி கண்கள், மூக்கு மற்றும் தொண்டையை எரிச்சலூட்டுகின்றன, அதே நேரத்தில் PAHகள் போன்ற இரசாயனங்கள் புற்றுநோய் ஊக்கிகள் மற்றும் ஹார்மோன் சீர்குலைப்பான்கள் என்று அறியப்படுகின்றன.

இந்த மாசுபடுத்திகள் உடலுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கின்றன?

காற்றில் வெளியாகி மண், நீர் மற்றும் உணவுப் பயிர்களில் படிந்தவுடன், இந்த மாசுபடுத்திகள் உள்ளிழுத்தல், உட்கொள்ளல் அல்லது தோல் தொடர்பு மூலம் மனித உடலில் நுழையலாம். உடலுக்குள், அவை தீங்கு விளைவிக்கும் உயிரியல் செயல்முறைகளைத் தூண்டுகின்றன:

  • அழற்சி (inflammation)  மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் (Oxidative Stress): நுண்துகள்கள் மற்றும் டையாக்சின்கள் போன்ற மாசுபடுத்திகள் உடலின் அழற்சி எதிர்வினையைத் தூண்டி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும், இது தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் (ஒற்றைப்படை எலக்ட்ரான்களைக் கொண்ட ஒரு அணு) செல்களை சேதப்படுத்தும் ஒரு நிலை. இது இருதய மற்றும் சுவாச நோய்களின் ஒரு முக்கிய வழிமுறையாகும்.
  • மரபணு மற்றும் செல்கள் சேதம்: சில மாசுபடுத்திகள் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தும் அல்லது செல் சிக்னலிங் பாதைகளில் தலையிடும் திறன் கொண்டவை. டையாக்சின்கள் மற்றும் சில கன உலோகங்கள் புற்றுநோய் காரணிகளாகச் செயல்பட்டு, இனக்கீற்று அமிலத்தை (DNA) நேரடியாக சேதப்படுத்துகின்றன அல்லது செல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் செயல்முறைகளை சீர்குலைத்து, புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
  • கர்ப்பத்தின் மீதான தாக்கங்கள்: கர்ப்பிணிப் பெண்களுக்கு, இந்த மாசுபடுத்திகளின் அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முறையான நஞ்சுக்கொடி வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை பாதிக்கலாம். இது கருவுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை சீர்குலைத்து, குறைப்பிரசவம் அல்லது அசாதாரண கரு வளர்ச்சி போன்ற பாதகமான பிறப்பு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

கொடுங்கையூரில் முன்னெச்சரிக்கைக்கான அழைப்பு

அறிவியல் சான்றுகள் ஒரு தெளிவான படத்தை வரைகின்றன: WTE எரிவுலைகளில் இருந்து வெளிப்படும் மாசுபாடுகள் உயிரியல் ரீதியாக பல்வேறு கடுமையான உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் திறன் கொண்டவை, மேலும் தொற்றுநோயியல் ரீதியாகவும் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள மாநகராட்சி குப்பைத் கிடங்கு மற்றும் 36க்கும் மேற்பட்ட சிவப்பு பட்டியல் தொழிற்சாலைகளால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கொடுங்கையூர் போன்ற ஒரு சமூகத்திற்கு, முன்மொழியப்பட்ட ஆலை ஒரு தீர்வைக் குறிக்கவில்லை, மாறாக கூடுதல் சுகாதார ஆபத்தை குறிக்கிறது. புற்றுநோய், சுவாசம் மற்றும் இதய நோய்கள் அதிகரிக்கும் அபாயங்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் பிறக்காத குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் சாத்தியக்கூறுகள், முன்னெச்சரிக்கை அணுகுமுறையைக் கோருகின்றன. இந்த ஆதாரங்களால் தெரிவிக்கப்பட்டபடி, சமூகத்தின் எதிர்ப்பு பொது சுகாதாரம் மற்றும் நிலையான, நச்சுத்தன்மையற்ற எதிர்காலத்திற்கான நியாயமான நிலைப்பாடாகும்.

Centre for Financial Accountability is now on Telegram and WhatsApp. Click here to join our Telegram channel and click here to join our WhatsApp channeland stay tuned to the latest updates and insights on the economy and finance.


A pop-up is always irritating. We know that.

However, continuing the work at CFA without your help, when the odds are against us, is tough.

If you can buy us a coffee (we appreciate a samosa with it!), that will help us continue the work.

Donate today. And encourage a friend to do the same. Thank you.