By

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னையின் எண்ணூர் பகுதி பல ஆண்டுகளாக பற்பல தொழில்துறை திட்டங்களின் இருப்பிடமாக உள்ளது. குறிப்பாக, அனல் மின் நிலையங்கள், உர தொழிற்சாலைகள், துறைமுகங்கள், எண்ணெய் மற்றும் பெட்ரோலிய தயாரிப்பு தொழிற்சாலைகள் ஆகியவை இங்கே இயங்கி வருகின்றன.

இங்கு வசிக்கும் கடலோர மக்கள் இத்தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாட்டின் விளைவுகளை பல ஆண்டுகளாக சகித்துக்கொண்டு வருகின்றனர். மாசுபட்ட நீர்நிலைகள்- கடல்கள், ஆறுகள், நீரோடைகள், நிலம் மற்றும் காற்று சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றால் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளன. கடலோர இடங்களையும் பொது நிலங்களையும் தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ததாலும்,நிலப்  பயன்பாட்டு முறையில் மாற்றம் காரணமாகவும், உள்ளூர் மக்களின் நிலைமை மோசமாகி வருகிறது.

இந்தக் கடலோர சமூகங்கள் பல்வேறு தளங்களில் தங்களின் பாதிப்புகளை பல ஆண்டுகளாக பதிவுசெய்துள்ளனர். இருப்பினும் அவர்களால் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதை தடுக்கமுடியவில்லை. எங்களைப் பொறுத்தவரை,  புதிய தொழிற்சாலைகளுக்கு வங்கிகள் தொடர்ச்சியாக நிதி உதவி அளிப்பது தான் இதற்குக் காரணம். இது போன்ற புதிய திட்டங்களினால் அவை இருக்கும் இடங்களில் ஏற்படக்கூடிய  விளைவுகளை சற்றும் கருத்தில் கொள்ளாமல் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கின்றன.

வளர்ச்சி என்று ஒருபுறம் பேசப்பட்டாலும், அந்த வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுபோல் தான், எண்ணூர் சிற்றோடைப்  பகுதியில் செயல்படும் வளர்ச்சித்  திட்டங்கள்  இயற்கை வளங்களை அழித்து, பல சவால்களை அங்குள்ள மக்களுக்கு உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன.

எண்ணூர் சிற்றோடை

சென்னையின் வடகிழக்குப்பகுதியில் அமைந்துள்ள எண்ணூரில் இரண்டு முக்கிய ஆறுகள் – கொசஸ்தலையாறு மற்றும் ஆரணி ஆறு – கடலை  சந்திக்கின்றன . இவ்விரண்டு ஆறுகளின் முகத்துவாரத்தில்  அமைந்ததுதான் எண்ணூர் சிற்றோடை- அது வங்கக்கடலில் கலக்கிறது.அதன் வடக்குப் பகுதியில் பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம்  உள்ளது. எண்ணூர் பகுதி சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி உள்ளூர் மக்களின் வாழ்விற்கும்  வாழ்வாதாரத்திற்கும் இன்றியமையாதது.

இந்த சிற்றோடை மற்றும் ஆறுகளின் அருகில் பல ஆண்டுகளாக மீனவர்கள் மற்றும் பிற சமூகத்தினர் வசித்து வருகின்றனர். சென்னை துறைமுகத்தின் அருகில் அமைந்துள்ளதால், இந்தப் பகுதியில் பெரிய அளவில் தொழில்மயமாக்கல் நிகழ்ந்துள்ளது. இதனால் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியது அங்கு வசிக்கும் மக்கள் ஆவர். இப்பகுதியில் பெரும்பாலான அனல் மின் நிலையங்களும், பிற தொழிற்சாலைகளும் அமைந்துள்ளதால் அப்பகுதி மக்கள்  கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உலர் சாம்பலின் தாக்கம்

1950களில் முதல் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டதிலிருந்து, எண்ணூர் பகுதி நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்களின் மையமாக மாறியது. மின் உற்பத்தியின் போது  உருவாக்கப்படும் நிலக்கரி சாம்பலை அனல் மின் நிலையத்தைச் சுற்றியுள்ள சாம்பல் குளங்களில் வைப்பது வழக்கம். அத்தகு சாம்பல் குளம் ஓன்று  தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) இயக்கும் வட சென்னை அனல் மின் நிலையத்திலிருந்து (1830 மெகாவாட்) சாம்பலைப் பெறுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் கிராமத்தில் உருவாக்கப்பட்ட இந்த சாம்பல் குளம் 1000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அது அங்குள்ள விளைநிலங்கள் மற்றும் உப்பளங்களை கையகப்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நிலக்கரி சாம்பல் பைப் மூலம் குளத்தில் செலுத்தப்படுகிறது. இவைகள் பழமையாகவும் பழுதடைந்தும் இருப்பதால் சாம்பல் குளத்திற்கு வெளியே சுமார் 344 ஹெக்டேர் நிலம் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக, குழாய்களின்  தொடர்ச்சியான கசிவின் காரணமாக நதிகள் மற்றும் எண்ணூர் சிற்றோடைப் பகுதிகள் தொடர்ந்து மாசுபடுகின்றன.

சாம்பல் குளங்களிலிருந்து கசிவு பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தாததால், அங்கு சுற்றியுள்ள நிலம், நிலத்தடி நீர் மற்றும் பிற வளங்கள் மாசடைந்துள்ளன. சாம்பலை குளத்திற்குக் கொண்டு செல்லும் குழாய்கள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமலும், மாற்றப்படாமலும் உள்ளன. இதனால் குழாயில் இருந்து சாம்பல் மற்றும் வெந்நீர் கசிகின்றன.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், ​​விரைவில் குழாய்களை மாற்றும்படி (ஜூலை 5, 2022, தேதியிட்ட உத்தரவு), தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு  உத்தரவிடப்பட்டது. ஆனால் இன்றும் பழுதடைந்த குழாய்களை மாற்றும் பணி நடந்து வருகிறது.

சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம்

இதற்காக அமைக்கப்பட்டக் குழு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு மார்ச் 2022இல் சமர்ப்பித்த அறிக்கையியில், 56 லட்சம் டன் அளவிற்கு மேல் நிலக்கரி சாம்பல் ஆற்றின் படுக்கையில் 1 அடி முதல் 8 அடி ஆழம் வரை பரவியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

சாம்பல் குளம் உருவாக்கத்தினாலும் சாம்பல் மாசுபாட்டினாலும், இவ்விடத்தின் இயற்கை வடிகால் அமைப்பு கணிசமாக மாறிவிட்டது.

இது உள்ளூர் நீரியலில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதனால், சிற்றோடை மற்றும் நதியின் வண்டல்களில் காட்மியம், குரோமியம், தாமிரம், ஈயம் மற்றும் துத்தநாகம் (சிங்க்) ஆகியவற்றின் தடயங்கள் பாதுகாப்பான அளவைத் தாண்டியுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளன.

முழு இடத்தின் நிலத்தடி நீரும், அனல் மின் நிலையங்கள் மற்றும் உலர் சாம்பலால் மாசுபட்டுள்ளது. அதில் அதிக அளவு கரைந்த உப்புகள், அலுமினியம், ஆர்சனிக், ஈயம், மாங்கனீசு மற்றும் துத்தநாகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அங்குள்ள கிராமங்களில் உள்ள நீர், பயன்பாட்டிற்கும், குடிப்பதற்கும் ஏற்ற வகையில்  இல்லை. கிராம மக்கள் தங்களின் வருமானத்தில் பெரும் பகுதியாகிய 500 – 1000 ரூபாய் வரை, தண்ணீரை விலைக்கு வாங்குவதற்கு செலவழிக்கின்றனர். உள்ளூர் பஞ்சாயத்தினால்  குழாய்கள் மூலம் வழங்கப்படும் நீரும்  மோசமான சுவையையோ அல்லது உப்புத்தன்மையையோ கொண்டுள்ளது; அல்லது நிலக்கரி சாம்பல் குழம்பினால் மாசுபட்டுள்ளது.

கூட்டு நிபுணர் குழுவின் ஏப்ரல் 2022 அறிக்கை எண்ணூர் பகுதியில் உள்ள மக்களுக்கு புற்றுநோய் மற்றும் பிற நோய்களின் அபாயம் மிக அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், தூசி மற்றும் மண்ணில் விளையாடுவதால் இந்த அபாயம் அதிகளவில் குழந்தைகளுக்கு உள்ளது. மாசுபாட்டால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்க, அங்கு குடியிருக்கும் மக்கள் தங்கள் சிகிச்சைக்காக மாதம் 800 – 1000 ரூபாய் செலவழிக்கிறார்கள்; பல நேரங்களில் மக்கள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து சிகிச்சைப்  பெறுகிறார்கள்.

அங்கு, ஒவ்வொரு மாதமும் ஒரு நபர் 7000 முதல் 8000 வரை ஊதியம் பெறுகிறார், அதுவும் விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வேலைக்குச் சென்றால்தான் கிடைக்கும். சம்பாதிப்பதில் பெரும்பங்கு குடிநீர் வாங்கவும், மருத்துவமனை செலவுக்காகவும் செல்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இங்கு வாழ்வது மிகவும் கடினம்.

பிரச்சனை மிகப்பெரியது மற்றும் அது இன்னும் பெரியதாகலாம். இதற்கு உடனடியாக ஒரு தீர்வு கிடையாது.

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எண்ணூர் சிற்றோடையில் மீனவர்களின்  பாரம்பரிய மீன்பிடி தளத்தில் குப்பைகளைக் கொட்டியுள்ளது. காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், எண்ணூர்குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சிவன்படைவீதி குப்பம், பெரியக்குப்பம், சின்னக்குப்பம் ஆகிய  எட்டு கிராமங்களை சேர்ந்த 9,000 மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இதனால் இழந்துள்ளனர்.

இங்குள்ள அனைத்து பகுதிகளும் காற்று மாசுபாட்டால் பல சுகாதார கேடுகளை சந்திக்கின்றன. எண்ணூர் சிற்றோடை மற்றும் கொசஸ்தலையாற்றில் ஏற்பட்டுள்ள அரிப்பால், மீனவர்கள் குறிப்பாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏனெனில் பல வகையான மீன்கள் அழிந்துவிட்டன அல்லது குறைந்துவிட்டன.

ஆற்றின் சேதம் மற்றும் மீன் பிடிப்பு அளவு குறைந்துள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கணிசமாக பாதிப்படைந்துள்ளது. அருகிலுள்ள இடங்களில் இருக்கும் மக்களும் மாசுபாடு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு, உடல்நலக்குறைவிற்கு பயந்து வேலையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், எண்ணூர் பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளின் பரப்பளவு 1996-ம் ஆண்டு 855.69 ஹெக்டேரில் இருந்து 2022-ம் ஆண்டு 277.92 ஹெக்டேராக குறைந்துள்ளது என்றும் பசுமை தீர்ப்பாயத்தின் கூட்டுக்குழு அளித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதே காலத்தில், கட்டப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட நிலப்பரப்பு 0 ஹெக்டேரில் இருந்து 259.87 ஹெக்டேராகவும், சாம்பலால் மூடப்பட்ட பரப்பளவு 0 ஹெக்டேரில் இருந்து 260.28 ஹெக்டேராகவும் அதிகரித்துள்ளது.

அனல் மின்நிலைய மாசுபாட்டால் மட்டுமல்லாது  துறைமுகம், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலை போன்றவற்றாலும் எண்ணூர் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எண்ணூர் மற்றும் சென்னையின் சுற்றுச்சூழல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகிறது. இன்றும் எண்ணூர் SEZ அனல் மின் நிலையம் பழைய சாம்பல் குளத்தின் மேல் கட்டப்பட்டு வருகிறது; அதன் கீழே லைனிங் செய்யப்படவில்லை.

இன்றும் புதிய துறைமுகங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, புதிய அனல் மின் நிலையங்கள் கட்டப்படுகின்றன. பழைய அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டாலும் அவை தொடங்கி வைத்த மாசு பிரச்சனை இன்றளவும் தொடர்கிறது. இவை அனைத்திற்கும் உரிய பொறுப்பு, அரசாங்கத்துடன், இந்த பேரழிவை தங்கள் நிதியுதவியுடன் நடக்க அனுமதிக்கும் நிதி நிறுவனங்களுக்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த பகுதியில் கட்டப்படும் அனைத்து அனல் மின் நிலையங்களுக்கும் ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்  (Rural Electrification Corporation) மற்றும் பவர் பைனான்ஸ் கார்பொரேஷன் (Power Finance Corporation) நிதி உதவி அளித்துள்ளன. இந்த நிதி நிறுவனங்கள் முறையான ஆய்விற்குப் பின்னர் தங்களின் நிதியுதவியை செய்திருந்தால், இந்த அளவிற்கு பல ஆண்டுகாலம் மக்கள் அவதிப்பட்டிருக்க மாட்டார்கள்.

This article was translated from Hindi into Tamil by Sharadha Narayanan.

Centre for Financial Accountability is now on Telegram. Click here to join our Telegram channel and stay tuned to the latest updates and insights on the economy and finance.